இலங்கையின் அசாதாரண நிலைமைகளைக் கருத்திற் கொண்டு ஒருசிலருக்கு அகதி அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுத்ததாக சொல்ஹய்ம் கூறியிருப்பது தொடர்பில் அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையிலுள்ள நோர்வேத் தூதரகத்தின் ஒருசில அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பன்னிரண்டு போ் நாட்டை விட்டுத்தப்பிச் செல்வதற்கான கடவுச்சீட்டு, விமானப்பயணச்சீட்டு என்பவற்றை வழங்கி, தூதரக வாகனத்திலேயே அவர்களை விமான நிலையம் வரை அழைத்துச் சென்று வழியனுப்பியதாக நோர்வேயின் முன்னணி நாளேடான aften posten செய்தி வெளியிட்டிருந்தது.
அத்துடன் இலங்கையின் ஒருசில நிலைமைகளைக் கருத்திற் கொண்டு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலருக்கு அகதி அந்தஸ்து வழங்கியதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹய்ம் குறித்த நாளேட்டிற்குக் கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்துக் குறித்து அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான நோர்வேத் தூதர் ஹில்டே ஹெரல்ஸ்டட் வெளிவிவகார அமைச்சுக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்ததுடன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம அவரிடம் எரிக் சொல்ஹய்மின் கருத்து தொடர்பான அரசாங்கத்தின் அதிருப்தியை தெரிவித்திருந்தார்.
அத்துடன் நோர்வே நாளேட்டில் வெளியிடப்பட்டிருந்தது போன்று பயங்கரவாதிகள் தப்பிச் செல்ல இலங்கையிலுள்ள நோர்வேத் தூதரகம் உதவியளித்திருக்குமாயின் அது குறித்தும் அரசாங்கம் கண்டனம் தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அகதி அந்தஸ்துக் கோரிவந்த ஒருசிலருக்கு தூதரகம் உதவியது தவிர பயங்கரவாதிகள் யாருக்கும் உதவவில்லை என்பதாக நோர்வேத் தூதர் வலியுறுத்தியுள்ளார்.
ஆயினும் இவ்விடயம் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தினால் தீவிரமாக ஆராயப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நோர்வேத் தூதரிடம் தெரிவித்துள்ளார்.



0 kommentarer