இலங்கை தமிழர்கள், அவுஸ்திரேலியா மற்றும் கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்லும் சம்பவங்கள், இலங்கை அதிகாரிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், ஏன் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்கிறார்கள் என தெரியவில்லை என மனித கடத்தல் சம்பந்தமான விடயங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர், நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார். இந்த சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பாக, வெளிநாடுகளில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ள போதும், அது விசாரணைகளுக்கு போதுமானவையல்ல, என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், கருத்துரைத்துள்ள, வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் ஒருவர், தமிழர்கள், முகாம்களிலோ அல்லது வெளியிலோ பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கவில்லை. இந்தநிலையில் ஏன் அவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பிசெல்கிறார்கள் என தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னரும், தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது. எனவேதான் அவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் சோதனை சாவடிகள் உட்பட்ட பல்வேறு விடயங்களால், தாம் இன்னும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக, உணர்வதன் காரணமாகவும் அவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்படுவதன் காரணமாகவே வெளிநாடுகளுக்கு செல்ல முனைவதாக தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை அண்மைகாலமாக, வெளிநாடுகளுக்கு பணிகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தமையை, கடவுச்சீட்டு விண்ணப்பங்களின் அதிகரித்த நிலையில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்துள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் சுனில் ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.



0 kommentarer