இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழக அரசியல் தலைவர்களிடம் நற்சான்றிதழ் பெறுவதற்காக, தமது ஆட்சியின் அலங்கோலங்களை மறைத்து, புதிய காட்சிகளை அரங்கேற்றி காட்டுவதற்காக இலங்கை அரசாங்கம் பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு அழைக்கப்பட்டதையும், அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் தூதுக்குழுவினராக இலங்கைக்கு வருகைத்தருவதையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
ஆனால் இங்கு வருகை தரும் தமிழக அரசியல் தலைவர்களிடம் நற்சான்றிதழ் பெறுவதற்காக தமது ஆட்சியின் அலங்கோலங்களை மறைத்து புதிய காட்சிகளை அரங்கேற்றி காட்டுவதற்காக கடந்த ஒருவாரகாலமாகவே இலங்கை அரசாங்கம் பாரிய முயற்சிகைள எடுத்து வருகின்றது என்பதை தமிழக தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், மனித உரிகைகள் தொடர்பிலான மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக எம்பிக்களின் விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கம் எத்தகைய முயற்சிகளில் ஈடுப்பட்டு உண்மைகளை மறைத்தாலும்கூட அதையும் மீறி உண்மை யதார்த்தங்களின் பின்னால் உள்ள தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எங்கள் தாய்மார்களின், குழந்தைகளின், வயோதிபர்களின், இளைஞர்களின் கண்ணீரையும், அவலத்தையும் அறிந்து கொள்ளும் பக்குவம் தமிழக தலைவர்களுக்கு இருக்கின்றது என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கின்றது.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்னை இந்திரா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரது பாசறைகளில் வளர்ந்த தலைவர்கள் காட்சிகளை தாண்டி ஆட்சியை அறிந்து கொள்ளும் அறிவாளர்கள் என்பதை நாம் அறிவோம்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே சிங்கள சகோதரர்களுடன், தமிழ் பேசும் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டு சமத்துவத்துடன் வாழும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நாங்கள் நகர விரும்புகின்றோம்.
தமிழ் மக்களின் மீதான பாரிய மனித உரிமை மீறல்களுக்கு தமிழக தலைவர்கள் இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தரக்கூடிய பொறுப்புள்ள பதில்களே இலங்கையில் தேசிய நல்லிணக்கத்திற்கு வழிகாட்ட முடியும் என தமிழ் மக்கள் நம்புகின்றோம்.
எதிர்வரும் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை தமிழக நாடாளுமன்றக் குழுவினரை கொழும்பில் சந்தித்து உரையாடும் வேளையில் இதுபற்றி நேரடியாக கருத்துகளை பரிமாற்றம் செய்து கொள்ளவிருக்கின்றேன் எனவும் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
தமிழக அரசியல் தலைவர்களிடம் நற்சான்றிதழ் வாங்க அரசு பகீரதப் பிரயத்தனம்: மனோ கணேசன் பா.உ.
Lagt inn av
chandran
10.10.09



0 kommentarer