முன்னாள் பிரதமர் பிரேமதாசவின் காலத்தில், மட்டக்களப்பில் 640 பொலிஸாரை வனப்பகுதியில் வைத்து கொலை செய்த முரளிதரன் (கருணா) என்பவருக்கு, தற்போது இந்த அரசாங்கம் அமைச்சுப் பதவி வழங்கியுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த பொலிஸ் அதிகாரிகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கொலை செய்து குழி தோண்டி புதைத்திருந்தாலும், இது தொடர்பில் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என ஜே.வி.பி.யின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் முரளிதரனிடம் பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலத்தையோ, விசாரணைகளையோ மேற்கொள்ளவில்லை என தெரிவித்த அவர், இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத சட்ட மூலம் எங்கு செயற்பட்டுள்ளது என கேட்டுள்ளார்.
மக்களின் வாக்களிப்புகள் மூலம் தெரிவு செய்யப்படாத அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு, அரசாங்கம் அமைச்சுப் பதவி வழங்குமாக இருந்தால், எவ்வாறு ஜனாநாயகம் செயற்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு கொலைகளுடன் தொடர்புடைய ஒருவரை அமைச்சராக நாட்டில் நிறுத்தி குற்றமற்றவராக நிரூபிக்க முடியுமாக இருந்தால், அது நாட்டின் நீதிக்கு ஏற்பட்டுள்ள அவமானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



0 kommentarer